Wednesday, August 29, 2012

"தியானமே கடவுளைக் காணும் வழி "

பாடல்:
"எண்ணா யிரத்தாண்டு யோகம் இருப்பினும் 
 கண்ணால் அமுதினைக் கண்டறி வார் இல்லை 
 உண்ணாடி யுள்ளே  ஒளியுற நோக்கினால் 
 கண்ணாடி போலக் கலந்திருந் தானே ".

பொருள்:
எண்ணாயிரம் வருட காலம் யோகத்தில் இருந்தாலும்
அமுதமாம் சிவனைக் கண்ணாரக் கண்டவர்  இலர் .
ஆனால் உள்நாடியாகிய சுழுமுனை நாடியில் ஒளி
வடிவாகத் தியானிக்கின்  கண்ணாடியின் ஒளி
போலத் தியானிப்பவருடன்  கலந்து  இறைவன் இருப்பன் .

எண்ணாயிரம்  என்பது  பல ஆண்டுகள் என்னும் பொருள்  
தரும் நிலையில் உள்ளது . இறைவன் இன்பவடிவினன் .
ஆதலின் அவனை அமுது எனறனர், யோகநிலையில் 
இருந்தால் மட்டும் போதாது . உள்நாட்டத்துடன்
இருக்கவேண்டும் ,என்பது கூறப்படுகிறது .
இதனால் இறைவன் நினைவின்றி எதைசெய்யினும்
பயன் இல்லை என்றனர் .
                                                   "ஓம் திருமூலர் தேவாய நம"

Thursday, August 23, 2012

"ஞான வாக்கியம்"

"ஏழுவகைத் தோற்றமும் அழிதல் நிச்சயமே ".         
ஏழுவகையான பிறப்புகளும் அழிதல் உறுதியாகும்.

"ஐம்புல நுகர்ச்சியில் பம்பும் அக்கன்மம் ".
ஐம்புலன்களின் மூலம் போகங்களை அனுபவிப்பதால்
அவ் வினைகள் வளரும்.

"ஏறு கன்மங்கள் காறு அறு பிறவி".
வளரும் வினைகள் அளவற்ற பிறப்புகளை உண்டாக்கும்.

"இளமை விவேகி பின் தளர்வறும் யோகியே". 
இளமையில் பொய் எது மெய் எது எனப் பகுத்தறிவோர்
 பிற்காலத்தில் திடமான யோகியாவார்.

"அனந்தல் குறைந்தால் மனம் செலும் மேலே".
தூக்கம்  குறைந்தால் மனம் சத்துவகுணத்திற் செல்லும்.

"கண்டப் பொருள் அறிகண்  துப்பு இலதே".
உருவப்பொருள்களை அறியும்கண் அறிவிலாச் சடம்.

"காணாப் பொருளைக் காண்கன்  மெய்க்கண்".
தூலக்கண்காணாப் பொருளைக் காணும்கண்  ஞானக்கண்.

"குருஅருள் இன்றி அருள் வரல் இன்றே".
குருவின்  அருள்  இல்லாமல்  இறை  அருள்  வருவதில்லை.

"கெடுதியாவது வடுவு உடை இச்சை".
குற்றமுள்ள ஆசையே  கேடு  எனப்படும்.

"கோட்டை ஆவது மாட்சிமை மோனம்".
சிறந்த  மௌனமே  ஒருவனக்கு  அரண்  ஆகும்.

"சகமே மறையும் அகம் முகம் அழுந்தின் ".
மனம் அடங்கினால் உலகமே மறைந்துவிடும் .

"சித்தி விரும்பார் முத்தி வரம்போர்". 
முத்திபெறும்  குறிக்கோளுடையார்  சித்துகளை  விரும்பார் .

"சுக  வழிபாடு பகிர்முகம் அன்று". 
முத்திக்குரிய வழிபாடு புறப்பூசையால் அன்று .

"சோர்வு படாது அருளார் சிவ ஆக்கம்".    
அருள் நிறைந்த  சிவனை நினைத்து வாழும் வாழ்வு கெடாது .

"ஞேகிழ்தல் மயங்கல் அகல முயல்க". 
தவத்தின் போது  சோர்தலும் மயங்கலும் நீங்க  முயல்க.

"தன்னை அறிதல் தவத்தில் தவமே". 
தான் யார் என்று அறிதலே தவத்தில் சிறந்த தவம் ஆகும் .

"நுகர்வன கண்டு நுகர்க பசித்தால்". 
பசித்தால் மட்டும் உண்ணத்தக்க உணவைத் தேர்ந்து உண்க.

"நெருப்பைப் போலக் கருத்தனை நினைக".
கடவுளை நெருப்பைப் போலக் கருதுக.

"பீடை தருமே மூடர் உறவு". 
மூடருடைய உறவு துன்பம் தரும்.

"புயல்போல் மறைக்கினும் வெயிலவன் போல்நில்". 
மேகம்போல் மறைத்தாலும் சூரியன்போல் நிற்பாயாக.

"பூரணம் ஆம்வரை  தாரணை  நீங்கேல்". 
ஒருபொருளில் மனம் நிலைபெறுவது முழுமையாகும்வரை
அச்செயலைவிட்டு நீங்காதே.     

"பெருஞ்சுவை  ஊண்இன்று அருந்துக சிறுக". 
வித விதமான பெரிய சுவை உணவுகளின்றிச் சாதாரண
உணவைச் சிறிதளவு உண்க.

"பேசா  நாட்கள்  பிறவா நாட்கள் ".
மௌன நாட்களே பிறவாமைக்கு ஏதுவான நாட்கள்.

"பொன்மண்  ஆசை  மண்மண்  ஆகும்". 
பொன் ஆசையும் மண் ஆசையும் உள்ள உயிர்  அழியும்.

"முன்வினை ஒழிவில் தன்நிலை தெரியும்". 
பலவினை ஒழியும்போது உயிர் தன் இயல்பை அறியும்.

"வானம் போலத் தியானம் செய்யே". 
மனத்தை வானம் போலத்தூய்மையுடனும்
அசையாமலும் வைத்துக்கொண்டு தியானம் செய்வாயாக .

"வினை எது புரியினும் அனகனை  மறவேல்". 
எந்த செயல் செய்தாலும் இறைவனை மறவாதே

"வெல்லுக வெளியில் செல்லும் மனத்தை". 
வெளியில் செல்லும் மனத்தைச் செல்லவிடாமல்
வெல்வாயாக.   

                               "ஓம் குமரகுருதாச குருப்யோ நம"  

  Wednesday, August 8, 2012

"கருமமே கண்ணாயிரு"

பாடல்:
"மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்;
 கண்துஞ்சார் எவ்வெவர்  தீமையும் மேற்கொள்ளார்;
 செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
 'கருமமே கண்ணாயிரு'.

விளக்கம்:
எடுத்த செயலை முடிப்பதில் (அல்) குறிக்கோளை
அடைவதில் கருத்தாய் உள்ளவர்கள்,  தம் உடலுக்கு
ஏற்படும் வருத்தத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்; 
பசியை மறப்பார்கள் ;மிகுதியாக உறங்க மாட்டார்கள் ;
பிறர் செய்யும் தீமையைப் பொருட்படுத்தமாட்டார்கள் ; 
வேளா வேளைக்கு இதைச் செய்யவேண்டும் ,
அதை செய்யவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்
கொண்டிருக்க  மாட்டார்கள்; பிறரால் ஏற்படும்
அவமதிப்பையும்  பொருட்படுத்தமாட்டர்கள்.

- குமர குருபர அடிகளார் (நீதிநெறி விளக்கம்)