Sunday, January 30, 2011

பட்டினத்தார் - "தாயாரின் இறுதி ஈமக்கடன் பாடல்"


ஐயிரண்டு  திங்களா அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதே  பரிந்து எடுத்துச் - செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்திபக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன். 

வட்டடிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டடிலிலும் வைத்தென்னைக்  காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறிகிலிட்டுத் தீமூட்டு வேன்.

நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டுஎன்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே  தீமூட்டு வேன்.

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் -  உருகிஉள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு
மானே என அழைத்த  வாய்க்கு.

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனா கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு.

முன்னை இட்டதீ முப்பு ரத்திலே
பின்னை இட்டதீ தென் னிலங்கையில் 
அன்னை இட்டதீ அடிவ யிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே.

வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
ஆகுதே பாவியேன்  ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி  என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்  உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்ததென்
தன்னையே  ஈன்றெடுத்த தாய் .

வீற்றிருந்  தாளன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதுஎன்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம் . 
                                                 -  "ஞான பிதா"

                                                                       

4 comments:

  1. அன்பு நண்பா ,

    தங்களின் புதிய பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .

    இந்த பாடல்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பது எனது அவா.இதனை படிக்கும்போதே நமது கண்கள் குளமாகிறது. மிக்க நன்றி சக்ரா.

    தாயின்றி யாரும் இல்லை அந்த தாயுமானவன் இன்றி யாரும் இல்லை. இந்த தாயை உணர்ந்தவன் இந்த தரணியில் இல்லை.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. வணக்கம்....நண்பா
    "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"

    தங்களுடைய பதில் கருத்துக்கு நன்றி..... .
    இந்த தாயை உணர்ந்தவன் இந்த தரணியில் இல்லை என்று தாங்கள் கூறியுள்ளிர்கள்... என் கருத்து என்னவென்றால் இந்த தாயை உணர்ந்தவன் இந்த தரணியில் உண்டு .. உண்டு என்பதை வெளியில் காட்டிகொள்ளமாட்டான் அவனே சித்தன்.. இதையே, என் குருநாதர் அகத்தியர், தன்னை உணர்ந்தவன் தன்னை காட்டிகொள்ளமாட்டான் என்கிறார் .
    தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......

    மிக்க நன்றி ... .
    என்றும்..நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com

    ReplyDelete
  3. நண்பா ,

    அருமையான விளக்கம் , எந்த தாயை என்பதில் தான் இங்கு பிரச்னை என நினைக்கிறேன். நான் கூறியவள் நீங்கள் கூறிய தாயாக இருக்க வாய்ப்பு இல்லை.

    "தன்னை உணர்ந்தவன் தன்னை காட்டிகொள்ளமாட்டான்" - உண்மையான தத்துவம்.

    தன்னை உணர்ந்தவன் தம்மை பிரபஞ்சத்தில் இணைத்து கொள்வான்.

    சித்தர்களின் நோக்கமே பரவெளியில் தம்மை இணைத்து கொள்வது தான் தரணில் அல்ல .

    முழக்கம் தொடரும்...

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  4. உண்மைச் சித்தர் கடவுளை மறந்தோ( பெரியார் சொன்னபடி), மறவாமலோ மனிதன் இந்த பூமியில் நலமாய் வாழ
    தமிழ் மூலமும், ஆராய்ச்சிகள் மூலமும் தொண்டுபரிந்தவர், பணம் வாங்காமல். மாயாமேல் உலகுக்குஇல்லாத ஊருக்கு போகாத வழிகாட்டியவர் அல்ல, என் கருத்து.



    ReplyDelete