Sunday, January 30, 2011

பட்டினத்தார் - "தாயாரின் இறுதி ஈமக்கடன் பாடல்"


ஐயிரண்டு  திங்களா அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதே  பரிந்து எடுத்துச் - செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்திபக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன். 

வட்டடிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டடிலிலும் வைத்தென்னைக்  காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறிகிலிட்டுத் தீமூட்டு வேன்.

நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டுஎன்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே  தீமூட்டு வேன்.

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் -  உருகிஉள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு
மானே என அழைத்த  வாய்க்கு.

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனா கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு.

முன்னை இட்டதீ முப்பு ரத்திலே
பின்னை இட்டதீ தென் னிலங்கையில் 
அன்னை இட்டதீ அடிவ யிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே.

வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
ஆகுதே பாவியேன்  ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி  என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்  உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்ததென்
தன்னையே  ஈன்றெடுத்த தாய் .

வீற்றிருந்  தாளன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதுஎன்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம் . 
                                                 -  "ஞான பிதா"

                                                                       

Wednesday, January 12, 2011

தனித்திரு விழித்திரு பசித்திரு

தனித்திரு : 
ஆசாபாசங்களில் அறிவை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல் , எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இருத்தல் ஆகும்.
விழித்திரு :
மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை  அன்புக்குரிய  நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய் , பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .
பசித்திரு :
தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் . அமுதமாயினும் அதிகம் புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக்  கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில் ஆன்மப்  பசியுடன் இருத்தல் ஆகும்.
                       -----' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்-----

Tuesday, November 2, 2010

பெண் மோக பித்தர்களுக்கு ......

"பெண்ணாகி வந்து ஒரு மாயப்
   பிசாசம் பிடித்திட்டென்னைக் 
கண்ணால் வெருட்டி முலையால் 
   மயக்கிக் கடிதடத்துப் 
புண்ணாம் குழியிடைத் தள்ளி என்
   போதப் பொருள் பறிக்க 
எண்ணாது உனைமறந் தேனிறை
   வாகச்சி ஏகம்பனே".  
----------------------------------------------------------------
  "நாறும் குறுதிச் சலதாரை 
        தோல் புரைநாள்  தொறும்சீ
ஊறும் மலக்குழி காமத் 
     துவாரம் ஒளித்திடும்புண் 
தேறும் தசைப்பிளப்பு அந்தரங்
     கத்துள் சிற்றின்பம் விட்டு 
ஏறும் பதந்தரு வாய்திருக் 
   காளத்தி ஈச்சுரனே" .
----------------------------------------------------------------------
"எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்ட முலை
எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ் -நித்தம் நித்தம்  
பொய்யடா பேசும் புவியின்மட மாதரைவிட்டு 
உய்யடா உய்யடா உய்".------------------------------------ஞான பிதா (பட்டினத்தார் )

Monday, November 1, 2010

இருப்பது பொய் போவது மெய்..

"இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே - பருத்ததொந்தி
நம்மது என்று நாம் இருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மது என்று தாம் இருக்கும் தான்".
                                          ஞான பிதா (பட்டினத்தார் ).

மீண்டும் பிறவி வேண்டாம் நமசிவாயமே ..

"மாதா உடல்சலித்ததாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா 
இருப்பையூர் வாழ்சிவனே இன்னமோர் அன்னை 
கருப்பையூர் வாராமல் கா". 
                              ஞான பிதா (பட்டினத்தார் ).

ஞான பிதா (பட்டினத்தாரின் ) சிவ சரணாகதி ....

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

Friday, October 29, 2010

சித்தர் காப்பு .....

"முக்தி கொண்டமோட்சமது மவுன  தீட்சை முனையறிந்து  செல்லுதற்கு வாலை காப்பு ; வெத்தி  கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ; வேதாந்தம் மூவாயிரம்  திருமூலர் பாதங் காப்பு ; அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ; அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங் காப்பு ; பரம கயிலாய  குரு போகர் பாதங் காப்பு ; கொடுஞ்  சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு; சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர்  பாதங் காப்பு ; இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர்  பாதங் காப்பு ; வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர்  பாதங் காப்பு ; மாயத்தை நீக்கிட மச்சமுனிவர்  பாதங் காப்பு ; முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர்  பாதங் காப்பு ; காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார்  பாதங் காப்பு ; பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி  பாதங் காப்பு ; மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி  பாதங் காப்பு ; தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி  பாதங் காப்பு ; காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர்  பாதங் காப்பு ; வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர்  பாதங் காப்பு ; கொல்குணம் போக்கும் கோரக்கர்  பாதங் காப்பு ; பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர்  பாதங் காப்பு ; தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்ட தேரையர்  பாதங் காப்பு ; வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர்  பாதங் காப்பு ; போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர்   பாதங் காப்பு ; நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ; அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ; பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ; காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ; கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ; காப்பான கருவூரார் , போக நாதர் கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் , சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே ".