Friday, February 25, 2011

"சற்குரு அகத்தியர் துதி மற்றும் ஸ்ரீ மகாபோகர் சித்தர் தியானச்செய்யுள்"

சற்குரு 'அகத்தியர்' துதி:
கற்றைவார் சடையன் பெற்ற கற்றைவார் சடையன் நீயே!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்!
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே!
வேந்தன் நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்!
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னனின் கடமை அன்றோ!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ!
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய்!
காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை!
நாவாயு புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்!
பேய் வாயினின்றும் மீட்ட பெருமானே என்றும் தாயாய் இருந்தே காப்பாய்!
தலைவைத்தேன் நினதுதாளே சரணம்!!!
                                            "ஒம் அகத்திசாய நம"
                                                   

ஸ்ரீ மகாபோகர் சித்தர் தியானச்செய்யுள்:
சிவிகை ஏந்தி,சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே
சிவபாலனுக்கு ஜீவன் தந்த சித்த ஒளியே
நவ பாஷாணத்து நாயகனே உங்கள் நல்லருள் காக்க! காக்க!

 "ஒம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் ஸ்வாமியே போற்றி"
  

Wednesday, February 23, 2011

"அறிதலே அறிவு"

"பட்டினத்தார்"
"என்னை யறியா லெனக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமல் உடலழிந்தேன் பூரணமே
வானென்பார் அண்டமென்பார் வாய் ஞானமே பேசி
தானென்பார் வீணர் தனையறியார் பூரணமே
ஒன்றாய் யுயிராய் உடல் தோறும் நீயிருந்தும்
என்று மறியார்களே ழைகள் தாம் பூரணமே 
நகார மகாராமென்பார் நடுவே சிகாரமென்பார்
வகார யகாரமென்பார் வகையறியார் பூரணமே 
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்த்துணைத்தான் போற்றாமல் 
காசிவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே 
உடலுக்குள் நீ நின்றுலாவினதைக் காணாமல்
கடல் மலைதோறும்திரிந்து காலலுத்தேன் பூரணமே".

 "சிவ வாக்கியார்"
"நட்டு வைத்த தேவரும் பொய் நான் மறை களாணதும் பொய் 
கட்டிவைத்த புத்தக கதைகளும் பொய் புராணமும் பொய் 
எட்டு திக்கு தேவரும்போய் ஏழிரண்டு லோகமும் பொய் 
மட்டில்லாத ஜோதினம் மனத்துள்ளே விளங்குமே"

"அகத்தில் உள்ள ஆன்ம ஜோதியை அறிதலே-ஆன்ம அறிவு" 

Friday, February 11, 2011

"அருவருப்பு ஆன்மிகம்"

பாடல் : 
"தங்கள் தேகம் நோய் பேரின் தனை பிடரி கோயிலிற் 
பொங்கல் வைத்தும் ஆடு ,கோழி பூசை பலியை இட்டிட 
நங்க சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் 
உங்கள் குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே".

"கும்பிடும் தெய்வ மெலாம் குல தெய்வமாய் சோடித்தே
நம்பி நாளும் பூசை செய்து நற்படிகள் தந்திட 
வெம்பிட வெதும்பிட மிடியதின லிடிபட 
தெம்பிட குடிகெடுக்கும் செத்த தெய்வமாகுமே".    
விளக்கம் :
உலக மக்களே , நீங்கள் நோய் வாய்ப்பட்டு விட்டால் உங்கள் ஊரில் உள்ள குல தெய்வங்களுக்கும் , வழி தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து ஆடு ,கோழி, பன்றி என முப்பூசை இட்டாலும் அதனால் நோய் , பிரச்சனை ,கஷ்டம் தீராது . அதனால் இந்த உயிர்களை கொன்ற பாவம் , உங்கள் வாழ்வில் அதிகம் சிரமம், கஷ்டத்தை தரும் . மேலும் சரீரமும், வாழ்க்கையும், தேய்ந்து போகும்.
நீங்கள், கும்பிடும் தெய்வமெல்லாம் குல தெய்வம் என்று கூறி அந்த தெய்வம் தன்னை காக்கும் என்று எண்ணி, தினந்தோரும் பொங்கல் பூசை செய்து வந்த போதும் அந்த குல தெய்வம் உன் தெம்பை குறைத்து ,உன்னை வெம்ப வைத்து ,மனம் வெதும்பவைத்து உன் வாழ்வில் இடிவிழுந்தது போன்று கஷ்டம்,பிரச்சனைகளை மேலும் அதிகமாக தரும் இந்த குடியை கெடுக்கும் செத்த தெய்வம்.
இந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மிகம் அல்ல .இந்த முறையும் ஞானம் அடைய உதவாது 
தன்னை அறியும் பக்குவத்தையும் தராது என புரிந்துகொள்ள வேண்டும்.
                                                         "சிவ வாக்கியார்"

Thursday, February 3, 2011

"பன்றியாகப் பிறப்பவர் யார் எனல்"

பாடல்:
"கொன்றி லாரைக் கொலச்சொலிக் கூறினார்
தின்றி லாரைத் தினச்சொலித் தெண்டித்தார்
பன்றி யாப்படி  யில்பிறந்த தேழ்நரகு 
ஒன்று வார்அரன் ஆணைஇது உண்மையே".

விளக்கம்:
கொல்லும் தன்மை இல்லாதவர்களைக் கொல்லும்படி சொல்லித் தூண்டினவர்களும் , புலால் புசியாதவர்களைப் புசிக்குமாறு சொல்லி வற்புறுத்தித் தின்னுமாறு  செய்தவர்களும் , பூமியில் பன்றியாகப்பிறந்து , பின்  ஏழ்
நரகத்திலும் போய்ச் சேர்வர். 
இது சிவபெருமான் ஆணையாகும், இது சத்தியம் .
மலம் தின்னும் இயல்புடையது பன்றி.ஆதலின் அதன் பிறப்பு இழியுடைதாயிற்று. அந்த இழி பிறப்புத் தீயவர்கட்கு ஏற்படும் என்பார். பன்றியாகப் படியில் பிறப்பார் என்றனர். பிறக்க வைப்பது இறைவனே ஆதலின் அரன் ஆணை என்றனர்.
                                                                     "திருமூலர்" 



Monday, January 31, 2011

"குருவழிபாடே சிறந்த வழிபாடு"

பாடல் : 
"இறைவனை வழிபட்டார்  எண்ணிலாத் தேவர் 
 அவனை வழிபட்டங்  காமாறொன் றில்லை
 அவனை   வழிபட்டங்  காமாறு காட்டும்
 குருவை வழிபடின் கூடலும் ஆமே".

விளக்கம் :
சிவபெருமானை பல தேவர்கள் வழிபட்டனர், அப்பெருமானை மட்டும் வழிபட்டால் போதாது, அப்பெருமானை வழிபட்டுப் பலன் பெற வேண்டுமானால் குருவையும் வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் எல்லா நன்மைகளும் கைகூடும்.
இறைவனை வழிபட்டால் ஒரு பயனும் ஏற்படாது என்றதன் கருத்து,இறைவனால் ஒன்றும் தர இயலாது என்பதன்று.அவன் திருவருளைப் பெறுவதற்குக் குருவின் திருவருளும் வேண்டும் என்பதாம்.இதனை வற்புறுத்தவே அவ்வாறு கூறப்பட்டது.
                                         "திருமூலர்"

Sunday, January 30, 2011

பட்டினத்தார் - "தாயாரின் இறுதி ஈமக்கடன் பாடல்"


ஐயிரண்டு  திங்களா அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதே  பரிந்து எடுத்துச் - செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்திபக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன். 

வட்டடிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டடிலிலும் வைத்தென்னைக்  காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறிகிலிட்டுத் தீமூட்டு வேன்.

நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டுஎன்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே  தீமூட்டு வேன்.

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் -  உருகிஉள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு
மானே என அழைத்த  வாய்க்கு.

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனா கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு.

முன்னை இட்டதீ முப்பு ரத்திலே
பின்னை இட்டதீ தென் னிலங்கையில் 
அன்னை இட்டதீ அடிவ யிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே.

வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
ஆகுதே பாவியேன்  ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி  என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்  உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்ததென்
தன்னையே  ஈன்றெடுத்த தாய் .

வீற்றிருந்  தாளன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதுஎன்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம் . 
                                                 -  "ஞான பிதா"

                                                                       

Wednesday, January 12, 2011

தனித்திரு விழித்திரு பசித்திரு

தனித்திரு : 
ஆசாபாசங்களில் அறிவை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல் , எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இருத்தல் ஆகும்.
விழித்திரு :
மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை  அன்புக்குரிய  நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய் , பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .
பசித்திரு :
தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் . அமுதமாயினும் அதிகம் புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக்  கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில் ஆன்மப்  பசியுடன் இருத்தல் ஆகும்.
                       -----' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்-----