Monday, January 31, 2011

"குருவழிபாடே சிறந்த வழிபாடு"

பாடல் : 
"இறைவனை வழிபட்டார்  எண்ணிலாத் தேவர் 
 அவனை வழிபட்டங்  காமாறொன் றில்லை
 அவனை   வழிபட்டங்  காமாறு காட்டும்
 குருவை வழிபடின் கூடலும் ஆமே".

விளக்கம் :
சிவபெருமானை பல தேவர்கள் வழிபட்டனர், அப்பெருமானை மட்டும் வழிபட்டால் போதாது, அப்பெருமானை வழிபட்டுப் பலன் பெற வேண்டுமானால் குருவையும் வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் எல்லா நன்மைகளும் கைகூடும்.
இறைவனை வழிபட்டால் ஒரு பயனும் ஏற்படாது என்றதன் கருத்து,இறைவனால் ஒன்றும் தர இயலாது என்பதன்று.அவன் திருவருளைப் பெறுவதற்குக் குருவின் திருவருளும் வேண்டும் என்பதாம்.இதனை வற்புறுத்தவே அவ்வாறு கூறப்பட்டது.
                                         "திருமூலர்"

Sunday, January 30, 2011

பட்டினத்தார் - "தாயாரின் இறுதி ஈமக்கடன் பாடல்"


ஐயிரண்டு  திங்களா அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதே  பரிந்து எடுத்துச் - செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்திபக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன். 

வட்டடிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டடிலிலும் வைத்தென்னைக்  காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறிகிலிட்டுத் தீமூட்டு வேன்.

நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டுஎன்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே  தீமூட்டு வேன்.

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் -  உருகிஉள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு
மானே என அழைத்த  வாய்க்கு.

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனா கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு.

முன்னை இட்டதீ முப்பு ரத்திலே
பின்னை இட்டதீ தென் னிலங்கையில் 
அன்னை இட்டதீ அடிவ யிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே.

வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
ஆகுதே பாவியேன்  ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி  என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்  உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்ததென்
தன்னையே  ஈன்றெடுத்த தாய் .

வீற்றிருந்  தாளன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதுஎன்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம் . 
                                                 -  "ஞான பிதா"

                                                                       

Wednesday, January 12, 2011

தனித்திரு விழித்திரு பசித்திரு

தனித்திரு : 
ஆசாபாசங்களில் அறிவை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல் , எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இருத்தல் ஆகும்.
விழித்திரு :
மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை  அன்புக்குரிய  நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய் , பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .
பசித்திரு :
தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் . அமுதமாயினும் அதிகம் புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக்  கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில் ஆன்மப்  பசியுடன் இருத்தல் ஆகும்.
                       -----' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்-----