Wednesday, September 5, 2012

"நல்ல குருவைக் கொள்ளாமையால் கேடே வரும்"

பாடல் :
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
 குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் 
 குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் 
 குருடும் குருடும் குழிவிழும் ஆறே" 

பொருள் :  
மக்கள் அஞ்ஞானத்தை நீக்கும் குருவைத் தேடி அடையார்.
அஞ்ஞானத்தைப் போக்காத குருவைத் தான் அடைவர் .
அவர்கள் செயல் பிறவிக் குருடாக இருக்கும். 
இரண்டு குருடர்கள் கண்மூடி ஆடும் ஆட்டம் ஆடிப் 
பள்ளத்தில் விழுதலுக்கு ஒப்பாவர். 
குருட்டாட்டம் என்பது சிறு  பிள்ளைகள் தம் கண்ணைத் 
துணியால் மறைத்துக் கொண்டு, எதிரிலுள்ள 
பிள்ளைகளைத் தொட முயற்சி செய்தல். 

Monday, September 3, 2012

"அகக் கண்ணால் பார்ப்பதே ஆனந்தம்"

பாடல் :
"முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
 அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆநந்தம்
 மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
 சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா  றெங்ங்னே"

பொருள் :
முகத்தில் அமைந்த கண்களைக்கொண்டு பார்க்கின்ற
மூடர்களே! அப்பார்வையால் யோகக் காட்சி தென்படாது .
மனக் கண்ணால் பார்க்கிறபோதுதான் யோகக்காட்சியின்
இன்பம் தோன்றும் .தாய் தன் கணவனோடு கலந்து
இன்புற்ற இன்பத்தைப் பற்றிக் கன்னியாக உள்ள
தன் மகட்குக் கூற முடியுமா? முடியாதன்றோ?.

                                 "ஓம் திருமூல சித்த தேவாய நம"

Sunday, September 2, 2012

"அச்சமில்லை அச்சமில்லை"

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"

இச்சகத்து ளோரெலாம்
   எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

துச்சமாக எண்ணிநம்மைத்
   தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
   பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை
   அச்சமென்பத் தில்லையே.

இச்சைகொண்ட பொருளெலாம்
   இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர்
   கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

நச்சைவாயி லேகொணர்ந்து
   நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

பச்சையூ னியைந்தவேற்
   படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

உச்சிமீது வானிடிந்து
   வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

" எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா,
              யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில்".

"ஓம் சுப்பிரமணிய பாரதியார் தேவாய நம"